Skip to main content

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் கைது!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
nam


சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தைக் கைவிடக்கோரியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர், செங்கம், ஆரணி, போளூர், வந்தவாசி, கலசப்பாக்கம், திருவண்ணாமலை தொகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை - வேலூர் சாலை, தீபம் நகர் அருகே சென்றபோது, தகவலறிந்து அவர்களை வழிமறித்த காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவிடாமல் தடுத்தனர்.

பின்னர் மனு கொடுக்க வந்தவர்களில் 27 பேர் கைது செய்யப்பட்டு தமிழ் மின்நகர், வெள்ளாளர் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். மாலை 6 மணியாகியும் விடுவிக்காதது குறித்து கேட்டதற்கு வழக்கு பதியவிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 – கலவரம் செய்தல், பிரிவு 188 – அரசு ஊழியரை மதிக்காதது மற்றும் குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் பிரிவு 7(1)(a) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற அமர்வு-2 ல் நீதிபதி விஸ்வநாதன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்