திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை செய்த 137 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக 156 வழக்குகள் பதியப்பட்டு, சுமார் 260 கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடக் கூடியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து அதில் ஈடுபட்டுவந்த 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் உள்ள 50 பள்ளிகளில் பயிலும் 5,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. மேலும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள், சமுதாயத்தில் ஏற்படும் அவமானங்கள், குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை விளக்கி மாநகர காவல்துறையினரால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.