கடந்த முறையை போலவே இப்போதும் 2 பெண்களுக்கு திமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்சென்னையில் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கப்பாண்டியன், தூத்துக்குடியில் கவிஞர் கனிமொழி களம் காண்கின்றனர்.
2014 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையில் திமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால், இந்த முறை திமுக 20 தொகுதிகளில் களம் இறங்குகிறது.
கடந்த முறை 3 டாக்டர்கள், 13 வழக்கறிஞர்கள், 9 பட்டதாரிகளுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது.அதேபோல், கடந்த முறை 2 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. (சேலம், ஈரோடு தொகுதிகளில் மட்டுமே பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்) ஆனால், இவர்கள் யாருமே வெற்றி பெறவில்லை. மொத்தம் 35 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 27 தொகுதிகளில் 2-ஆம் இடத்தையும், 7 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. புதுச்சேரியில் 4-வது இடத்தை பிடித்தது.
கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதிய தமிழகம் கிருஷ்ண சாமிக்கு தென்காசி, மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இவர்களும் தோல்வியை தழுவினர்.
இந்த முறை 20 தொகுதிகளில் களம் இறங்கும் திமுக, கடந்த முறையை போலவே 3 டாக்டர்கள், 2 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், வழக்கறிஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த முறை 4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. பொறியியில் பட்டதாரிகள் 2 பேர், பட்டதாரிகள் 9 பேர், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் தலா ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.