
மஞ்சுவிரட்டில் கண்டபடி காளைகளை அவிழ்த்துவிட்டதால் காளைகள் முட்டித் தூக்கி வீசியதில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் நவநீதகிருஷ்ணன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோவில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனீஸ்வரர் கோவில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் வரிசையாக அவிழ்க்கப்பட்ட காளைகள் பின்னர் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏராளமான காளைகள் பார்வையாளர்கள் நிற்கும் பக்கங்களிலும் ஓடியது. வரிசையாக காளைகளை அவிழ்க்க வேண்டும் என்று அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்திற்குள் வேகமாக ஓடிய ஒரு காளையை பார்த்து இளைஞர்கள் அங்குமிங்குமாக ஓடிய நிலையில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த மீமிசல் காவல் நிலைய காவலர் நவநீதகிருஷ்ணன்(32) அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயலும்போது வேகமாக வந்த காளை குத்தி தூக்கி வீசியது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

பலத்த காயமடைந்த காவலரை அங்கு நின்றவர்கள் மீட்டு முதலுதவி செய்து தயாராக நின்ற ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சபரி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி செய்கிறார். இருவரும் 2013ல் போலீஸ் வேலைக்கு வந்தவர்கள். இவர்களுக்கு மிதுன் சக்கரவர்த்தி (8), கீர்த்திவாசன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
பாதுகாப்பிற்குச் சென்ற காவலர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே பணியிடத்தில் காளை முட்டி உயிரிழந்த போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்களும் சக போலீசாரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (30). என்ற இளைஞரும் காளை முட்டியதில் உயிரிழந்தார். பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மற்றும் பார்வையாளரான சுப்பிரமணியன் ஆகிய இருவரும் காளைகள் முட்டி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. இருவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர். மேலும் காளைகள் முட்டியதில் சுமார் 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு என்பது வாடி வாசலில் இருந்து பலத்த பாதுகாப்புகளோடு ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடுவதால் அதிக ஆபத்துகள் தவிர்க்கப்படுகிறது. அதேபோல வடமாடு மஞ்சுவிரட்டிலும் பாதுகாப்பு உள்ளது. ஆனால் மஞ்சுவிரட்டில் பல திசைகளில் இருந்தும் காளைகள் அவிழ்ப்பதால் பார்வையாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.