சென்னை செங்குன்றத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை செங்குன்றம் பகுதியில் 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 5 வாலிபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி கைப்பட புகார் கடிதம் எழுதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில், 'லாரி டிரைவரான அப்பா குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் தினமும் குடித்துவிட்டு அம்மாவிடம் சண்டையிட்டதால் அம்மா வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். அதன்பிறகு நான் எனது 15 வயது அண்ணனுடன் வசித்து வருகிறேன். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி திருத்தணியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு அண்ணன் சென்றிருந்த நிலையில் நான் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. தந்தை குடித்துவிட்டு வீட்டுக்கு வராததைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஐந்து பேர் பிப்ரவரி 8 ஆம் தேதி நள்ளிரவில் வீட்டிற்கு வந்து உறங்கிக்கொண்டிருந்த என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். இதனால் வெளியே ஓடிவந்த என்னை மிரட்டினர். இதேபோல் அடிக்கடி வீட்டிற்கு வந்து எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தனர். இவர்கள் ஐந்து பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
சிறுமியின் இந்த புகாரை அடுத்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியான நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பான விசாரணைக்குப் பிறகு செங்குன்றம் பகுதியில் சுற்றித்திரிந்த கவுதம், அப்துல், லக்ஷ்மணன், பாபு, அக்பர் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த ஐந்து பேர் மீதும் போக்சோ, இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.