
இருசக்கர வாகனம் காணாமல் போனது தொடர்பாக புகாரளிக்க வந்த பெண்ணை காவலர் ஒருவர் உல்லாசத்திற்கு அழைத்து கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு பணி நிமித்தமாக சென்றபொழுது அவருடைய இருசக்கர வாகனம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழியர் ஆவடி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருடுபோன இருசக்கர வாகனம் மீட்கப்பட்ட நிலையில் இதுகுறித்த தகவலை ஆவடி காவல்நிலைய குற்றப்பிரிவு காவலர் ஹரிதாஸ் என்பவர் சம்பந்தப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்பொழுது தன்னுடைய பெயரை மறைத்து சசிகுமார் என்ற பெயரில் பேசியுள்ளார். உங்களுடைய வாகனம் கிடைத்துவிட்டது. அதைப்பெற்றுக் கொள்ள வரும்போது 15 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்பெண்ணோ தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை. வேண்டுமானால் 5000 ரூபாய் என்னால் கொடுக்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேரில் வந்த அப்பெண்ணிடம் 2000 ரூபாயை காவலர் ஹரிதாஸ் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் அப்பெண்ணை தொடர்பு கொண்டு 'உன் மீது ஆசையாக இருக்கிறது. உனக்காக ஹோட்டலில் அறை எடுத்துள்ளேன். நீ கண்டிப்பாக என்னுடன் தனிமையில் தங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
பார் வசதி மற்றும் நீச்சல் குள வசதிகள் உள்ள பிரபல விடுதியான ப்ரீத்தா கார்டனுக்கு பெண்ணை அழைத்துள்ளார். குற்றப்பிரிவு காவலரின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னுடைய சகோதரனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
காவலர் அழைப்பில் வருவதுபோல தன்னுடைய சகோதரனையும் அப்பெண் உடன் அழைத்து வந்துள்ளார். 'வண்டி கிடைத்து விட்டதாக போன் வந்தது; வண்டிய எடுத்தாச்சு என்றால் என்ன செய்ய வேண்டும் முறையாக கையெழுத்து வாங்கிக்கொண்டு வண்டியை கொடுத்து அனுப்பி விட வேண்டும்; அப்படி இல்லையென்றால் இவ்வளவு தூரம் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம் ஏதாவது பணம் கொடுங்க என கேட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும். ரூம் புக் பண்ணிருக்கேன் வா என கூப்பிடலாமா?' என அப்பெண்ணின் சகோதரர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தகாத முறையில் நடந்து கொண்ட காவலரை கையும் களவுமாக பிடித்த நிலையில் காவலர் ஹரிதாஸ் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பினார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய சகோதரரும் ஆவடி காவல் ஆணையரகத்தில் கொடுத்த அளித்த புகாரின் பேரில் ஆவடி காவல் உதவி ஆணையர் கனகராஜ் குற்றப்பிரிவு காவலர் ஹரிதாஸை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.