வடகாடு, நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி விவசாயிகள் 12 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் லேபரெட்டரிஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நெடுவாசலில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய நிலையில் வடகாடு கல்லிக்கொல்லை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் ஆய்குழாய் கிணற்றை அகற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வடகாடு கடைவீதியில் பந்தல் அமைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். .இந்த நிலையில் 21 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலிசார் போராட்டக்காரர்களிடம் சமாதன பேச்சுவார்த்தை நடத்தி ஒ.என்.ஜி.சி ஆழ்குழாய் கிணற்கை 6 மாதகாலத்திற்குள் அகற்றி கொடுப்பதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் எழுதிக் கொடுத்த பிறகு போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது.
அதே போல நல்லாண்டார்கொல்லை கிராம மக்களின் போராட்டம் தொடர்ந்து 47 நாட்கள் நடந்த நிலையில் அங்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கலெக்டர் கணேஷ் 6 மாதத்தில் ஆழ்குழாய் கிணற்றை அகற்றி கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனால் அங்கும் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடியதாக கீரமங்கலத்தில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிர்வரும் 15 ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளது.
அதே போல வடகாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மார்ச் 12 ந் தேதி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு போக்கவரத்துக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை அடைத்து கூட்டமாக நின்றதாக.. வடகாடு சப்இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் ராஜகுமாரன், போத்தியப்பன், விஜய்ஆனந்த், சுப்பிரமணியன், சுதாகர், சரவணன், செல்வகுமார், முரளி, ராஜாராம் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 8 பேரும் 15 ந் தேதி ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த 8 பேருக்கும் இன்னும் சம்மன் கிடைக்கவில்லை என்று.
அதே போல நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் நடத்தியவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக வடகாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அழகர், மற்றொரு அழகர், வினோத் உள்பட 4 பேருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சம்மன் கிடைக்கவில்லை.
ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு இருக்காது என்று சொன்ன மாவட்ட நிர்வாகம், காவல் துறை தற்போது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக கூறுவது விவசாயம் காக்க போராடியவர்களை வேதனைப்பட வைத்துள்ளது என்கின்றனர் விவசாயிகள்.