தஞ்சை தெற்கு வீதி வரகப்ப அய்யர் சந்து பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது பெயரில் திருவையாறு தாலுகா ராஜேந்திரம் ஆற்காடு பகுதியில் 4 ஏக்கர் 48 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இதை சசிகலா அண்ணன் சுந்தரவதனம் (67), தன்னிடம் விற்று விடுமாறு 2008ம் ஆண்டு முதல் ராஜேந்திரத்தை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜ் என்பவருக்கு ரூ.65 லட்சத்துக்கு நிலத்தை விற்பதற்காக ராஜேந்திரம் ஒப்பந்தம் போட்டார். இதில் முருகராஜ் ரூ.15 லட்சத்தை முன் தொகையாக ராஜேந்திரத்திடம் வழங்கினார்.
இந்த இடத்தின் மீது எற்கனவே சசிகலா சகோதரருக்கு ஒரு கண் இருந்த நிலையில் வாங்க வந்தவரை மிரட்டி அனுப்பிவிட்டு, நில உரிமையாளரையும் அடியாட்களை வைத்து மிரட்டி 04.12. 2008 தேதி அன்று வெறும் 6 லட்சம் கொடுத்து நிலத்தை அபகரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரம், தனது நிலத்தை மீட்டு தருமாறு வருவாய்த்துறையில் புகார் செய்தார். ஆர்டிஓ விசாரணை நடத்தி 2014 ஆம் ஆண்டு, சுந்தரவதனத்துக்கு வழங்கிய பட்டா மாற்றம் செல்லாது என்று அறிவித்தார்.
மேலும், நிலத்தை மீட்டு தரக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரம் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி, 2015ம் ஆண்டும் சுந்தரவதனம் (67), அவரது உறவினர் மதி, ராஜா டிம்பர் டிப்போ முருகராஜ், மோகன்குமார், ராஜேஸ்வரன், முருகன், ராஜசேகர், சங்கர், தர்மலிங்கம், ஜெஸ்டின் ஆபிரகாம், சிவசங்கர் ஆகிய 11 பேர் மீது தஞ்சை நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கின் குற்ற பத்திரிக்கையை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் ஆஜராகுமாறு குற்றம் சாட்டபட்ட 11 பேருக்கும் சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி மணிகண்டன் கடந்த மாதம் 3ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.