வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை கோரி சந்தீப் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்த 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான நாகமுத்து, “இந்த விவகாரம் மிகவும் முக்கியமான விவகாரம். இந்த வழக்கை நீங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இதையும் விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் ''1994ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அது தொடர்பான வழக்கில் கூட இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் எந்த ஒரு இறுதி முடிவும் வராமல் இருக்கக் கூடிய சூழலில், இந்த வழக்கில் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதால் என்ன பலன் ஏற்பட போகிறது. முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்பதைப் பாருங்கள். அதற்குப் பிறகு எங்களிடம் வாருங்கள்'' எனக் கூறினார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நாகமுத்து, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார். ஆனால், இடைக்காலத் தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும், இந்த மனு மீது தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.