விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டங்களைத் தெரிவித்து இருந்தார். அதேபோல் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பது வறுமை நிலையில் உள்ளவர்களை கள்ளச்சாராயம் அருந்தினால் உயிரிழந்து 10 லட்சம் ரூபாய் பெறலாம் என்பதை ஊக்குவிப்பதை போல் இருக்கும் எனச் சாடி இருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், ''நான் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருநெல்வேலியில் வாக்கு கேட்டுக் கொண்டிருந்தேன் அப்பொழுது நல்ல உச்சி வெயில். வேகமாக மிதிவண்டியில் வந்த ஒருவர் , என் பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு, “வா என் கூட.. கடையில பத்து ரூபாய் சேர்த்து விக்கிறாங்க குவாட்டர். வந்து என்ன என்று கேளு” என்றார். அந்த காலத்தில் இருந்து இது இருக்கிறது.
செந்தில்பாலாஜி பதவி விலகியிருக்க வேண்டும். அதற்கான காரணங்கள் எவ்வளவோ இருக்கிறது. கொடநாடு கொலை சம்பவத்திற்காக எடப்பாடி பழனிசாமி பதவி விலகியிருக்க வேண்டும். விஷச் சாராயத்திற்கு இவர்கள் எல்லோருமே பதவி விலகியிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பேற்று விலகிப் போவதற்கு இவர்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய நேர்மையாளர்கள் ஒன்றும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் விஷச் சாராயம் விற்கப்பட்டது. அவருடைய ஆட்சியிலும் விஷச் சாராயம் இல்லை என்று சொல்ல முடியாது.
ஒரு நல்வாய்ப்பாக அவரது ஆட்சிக்காலத்தில் யாரும் சாகவில்லை. ஆனால் அதிமுகவினர் இதை வைத்துக்கொண்டு ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். ஆளுநருக்கு ஏன் அவ்வளவு அதிகாரத்தை கொடுக்கிறீர்கள். அவர்களுக்கு இந்த பதவியை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது, அந்த கட்சியினுடைய தலைவர், முதல்வர் என தேர்வு செய்தது மக்கள். ஆனால் நீங்கள் ஆளுநரிடம் போய் பதவியை நீக்குங்கள் என்று சொல்கிறீர்கள். அவரிடம் ஏன் வம்படியாக அதிகாரத்தை கொடுக்கிறீர்கள்.
இதேபோல் ஆளுநரிடம் அவரது ஆட்சியில்தான் கொடநாட்டில் கொலை நடந்தது என இவர்கள் மனு கொடுப்பார்கள். மக்கள் இதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வரும் தேர்தல்களில் செந்தில் பாலாஜி தோக்கணுமா; இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டுமா என முடிவு செய்வார்கள்.
ஏற்கனவே தமிழக முதல்வர் வெளிநாட்டுக்குச் சென்றதில் எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது. அந்நிய முதலீடு, வெளிநாட்டவர் முதலீடு என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவை எல்லாம் ஆபத்தானது தானே. கப்பலில் வாணிகம் செய்ய வந்தவர்களை விரட்டி விட்டீர்கள். இப்பொழுது வானூர்தியில் வாணிகம் செய்ய வருபவர்களை வா வா என்று வரவேற்கிறீர்கள். அன்று ஒரு நாட்டுக்கு அடிமையாக இருந்தோம். இன்று உலக நாடுகளுக்கு அடிமையாக இருக்கத் துடிக்கிறது நாடு'' என்றார்.