
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் நேற்று (25.03.204) தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்கு பதிலாக தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.