மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ.யின் இயக்குநர் பதவி, கடந்த பிப்ரவரியிலிருந்து காலியாக இருக்கிறது. சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா, பிப்ரவரியில் ஓய்வுபெற்றார். கூடுதல் இயக்குநர் பிரவீன் சின்ஹாவை பொறுப்பு இயக்குநராக நியமித்தார் பிரதமர் மோடி.
இந்திய அரசின் உயரிய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ.யின் இயக்குநர் பதவிக்குத் தகுதியான அதிகாரியை நியமிக்காமல், அந்தப் பதவியை 5 மாதங்களாக காலியாகவே வைத்திருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்தன. இந்த நிலையில், புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (24.05.2021) டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், மோடியின் விருப்பத்தைக் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் ஏற்கவில்லை என தெரிகிறது. குறிப்பாக, இயக்குநரை தேர்வு செய்யும் நடைமுறை, குழுவின் விதிகளுக்கு முரணாக இருக்கிறது என அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
உத்தரப்பிரதேச கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான அம்மாநில டி.ஜி.பி.யாக இருக்கும் ஹெச்.சி. அவஸ்தி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இருக்கும் கௌமுதி, பீஹார் கேடர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜேஷ் சந்திரா ஆகிய மூன்று அதிகாரிகளில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என பிரதமர் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மேற்கண்ட 3 அதிகாரிகளையும் பிரதமர் அலுவலகத்தின் சிபாரிசின்படி மத்திய பணியாளர் பயிற்சித் துறை தேர்வுசெய்து கொடுத்திருக்கிறது. ஆனால், இந்த நடைமுறைகளில் விதிகளுக்குப் புறம்பாக அதிகாரிகளின் பேணல் தயாரிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், சி.பி.ஐ. யின் புதிய இயக்குநரை தேர்வு செய்ய நடந்த கூட்டம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.