
திருச்சி மாநகராட்சியில் மேயர் யார் என்ற கேள்வி மறைந்து தற்போது யார் துணை மேயர் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலரும் பலருடைய பெயர்களை துணை மேயர் இவர்தான் என்று கூறி வரும் நிலையில், ஒரு புதிய முகத்தை துணை மேயராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சியின் துணை மேயராக காங்கிரஸ் தரப்பில் சுஜாதாவும், திமுக தரப்பில் விஜயா ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்து வந்தனர்.

அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சார்பில் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணன் துணைமேயர் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் கே.என்.நேரு அதை முற்றிலுமாக நிராகரித்தார். அவருக்கு பதிலாக தற்போது திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டில் போட்டியிட்ட திவ்யா தனக்கோடி சுமார் 4 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 3 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் அவருக்கு துணை மேயர் பதவியை வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.