தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி நேற்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கி, தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டிருந்த 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
கோவை தெற்கில் நேற்று காலையில் இருந்து முன்னணியில் இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாலையில் பின்னடைவைக் கண்டிருந்த நிலையில், இறுதியில் அங்கு பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றிபெற்றார். கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்ற நிலையில் வானதி ஸ்ரீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இந்நிலையில், கோவையில் தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன், ''வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். இதற்கான கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் எளிமையான முறையில் எந்தவித ஆடம்பரங்களும் இல்லாமல் மக்களுக்கு நன்றி சொல்வது கடமை. எனவே அதிகமாக வாகனங்கள் எல்லாம் இல்லாமல் குறிப்பிட்ட சில பகுதிகளில் சென்று எந்தவிதக் கூட்டங்களையும் கூட்டாமல் நன்றி தெரிவிப்பது எப்படி என்பது பற்றி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அறிவிக்கிறோம். பாஜக பொறுப்பாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்''என்றார்.