அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் கல்யாணி ஆகியோருக்குப் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் குருநாதன் என்கின்ற குரு. பாமகவில் தீவிரமாக செயல்பட்டார். மாநில வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். 2001ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்த ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதனால் இவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. அதேபோன்று புதிய வீராணம் திட்டத்தை எதிர்த்து போராடியது தொடர்பாகவும் பல வழக்குகள் பதியப்பட்டன முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை 5 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஓராண்டுக்கு மேலாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காடுவெட்டி குரு, அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி உயிரிழந்த அவரது உடல் காடுவெட்டி கொண்டுவரப்பட்டு அவரது மாந்தோப்பில் அடக்கம் செய்யபட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், குரு குடும்பத்திலுள்ள கடன்கள் அனைத்தையும் அடைக்கப்படும் என்றும் கோனேரி குப்பத்தில் உள்ள கல்லூரியில் குருவின் சிலை வைக்கபடும் என்றார். குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மணி மண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
கிராம மக்கள் ஒன்றிணைந்து காடுவெட்டியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 50 சென்ட் நிலத்தை கட்சி தலைவர்களிடம் தானமாக வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து கடந்த 13.12.18 அன்று காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பெயர் பலகையை திறந்து வைத்தார். சிலைத்திறப்பு முதல் மணிமண்டபம் வரை அனைத்து செலவுகளையும் சமூக முன்னேற்ற சங்கம் ஏற்று கட்டுமான பணிகளை மேற்கொண்டது.
மணிமண்டபம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று இன்று திறப்பு விழா நடைபெற்றது. மணிமண்டபத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
காடுவெட்டி குரு மணிமண்டபத்தை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்புமணி பேசுகையில், மாவீரன் இருந்து இருந்தால் தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பார். இந்த மணிமண்டபம் உலக வன்னியர்களை ஒருங்கிணைப்பு செய்யும் சின்னம். மாவீரன் இருந்த காலத்தில் ராமதாஸிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தனர். ஆனால் அவர் என்னையும் ராமதாஸையும் மரணம் மட்டுமே பிரிக்கும் என்றார். நம்மிடையே ஒற்றுமை இல்லை.
காலம் காலமாக எதிரிகள் நம்மை பிரித்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானது திமுக. மற்ற சமுதாயத்தில் அதன் தலைவர்களை யாரும் இழிவாக பேசுவதில்லை. ஆனால் வன்னியர்கள் மட்டுமே 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ராமதாஸை திட்டுவார்கள்.
பின்னர் பேசிய ராமதாஸ், பாமக கூட்டங்களில் பேனர்கள், தட்டிகள், சுவர் விளம்பரம் செய்ய கூடாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற விளம்பர பேனர்கள் இல்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு மூலம் வழக்கு தொடரப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், அதிமுக சார்பில் அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.