Skip to main content

“கொலை செய்ய ஆள் அனுப்பியவர்கள் வீட்டில் தலைவாழை விருந்து சாப்பிட்டபோது வெட்கமாக இல்லையா?” மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

mkstalin

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - குப்பம் ஊராட்சி, காரணையில் நடைபெற்ற, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், 

 

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவது என்பது உங்களது கவலைகளைத் தீர்ப்பதற்காகத்தான். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான். உங்களது எண்ணங்களை அமல்படுத்துவதற்காகத்தான் என்பதை மக்கள் முதலில் உணர்ந்திருக்கிறார்கள். இதுவரை நான் வலம் வந்த 71 தொகுதிகளாக இருந்தாலும் - இன்று மனுக்களைத் தந்து நீங்கள் பேசியிருக்கக் கூடிய இந்த மாவட்டத்தின் நான்கு தொகுதிகளாக இருந்தாலும் - எந்தத் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பேசுவதைக் கேட்கும்போது தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இல்லை, இல்லவே இல்லை என்பதைத்தான் உணர முடிகிறது.

 

ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால், மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை ஒரு அரசாங்கம் நிச்சயமாக தீர்த்து வைத்திருக்கும். மக்கள் கோரிக்கை வைப்பது எல்லாம் ஏதோ பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கானவை அன்று. அவை அவர்களது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகளைத் தீர்க்கவே கோரிக்கை வைக்கிறார்கள். அதைக் கூட பழனிசாமி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

 

பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்த்து மிரண்டு போன பழனிசாமி, குறைதீர்க்கும் மேலாண்மைத் திட்டம் கொண்டுவரப்போவதாகவும், அதற்கு ஃபோன் செய்தால் போதும் என்றும் அதனால் ஸ்டாலினுக்கு இனி வேலை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

 

கடந்த நான்காண்டு காலமாக பழனிசாமிக்கு இந்த புத்தி வரவில்லை. இந்த ஸ்டாலின் சொன்ன பிறகுதான் புத்தி வருகிறதா? அப்படி என்றால் யார் முதலமைச்சர்? அவரா? நானா?

 

அதுவும் புகாரை செல்ஃபோன் மூலமாக சொல்ல வேண்டுமாம்! 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் செல்ஃபோன் தரப்படும் என்று சொன்னார்களே? செய்தார்களா? இல்லை! பழனிசாமி கொடுத்தாரா? இல்லை!

 

அல்வாதான் கொடுத்துக்கொண்டிருக்கிறார். 'எல்லா மக்கள் குறையையும் நான் தீர்த்துவிட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு கொடுக்கவில்லை' என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். மனு கொடுத்த நீங்கள் மக்கள் இல்லையா? வானத்தில் இருந்து குதித்து வந்துள்ளீர்களா?

 

ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது? கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமி எதையும் செய்யவில்லை என்பதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மனுக்களின் மூலமாகச் சொல்லி வருகிறார்கள். இந்த லட்சணத்தில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்தக் குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். பழனிசாமி ஆட்சியின் குறைகளைக் கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை, கண்ணை மூடிக்கொண்டிருந்தாலே கண்டுபிடித்துவிடலாம்!

 

திடீரென்று விழுப்புரத்தில் தடுப்பணை உடையும் சத்தம் வரும்! படாரென்று தாராபுரத்தில் பாலத்தில் விரிசல் விடும் சத்தம் வரும்! கரூரில் மினி கிளினிக் உடைந்து விழும்! நாமக்கல்லில் மருத்துவக் கல்லூரி கட்டடமே இடிந்து விழுந்தது. அந்த சப்தம் வரும்! படார் படார் என்றும் மடார் மடார் என்றும் அரசுக் கட்டடங்கள் உடைந்து விழுந்தால் அது பழனிசாமி ஆட்சி என்று அர்த்தம். பொதுப்பணித்துறை அமைச்சரான பழனிசாமியின் கைங்கர்யம் இவை என்று அர்த்தம். இவை அனைத்தையும் காதால் கேட்கலாம். கண்ணைத் திறந்தே பார்க்கத் தேவையில்லை!

 

பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்று தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதாதா? 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்துவிட்டது.

 

அது அணை அல்ல, சுவர்தான் என்கிறார் சட்ட அமைச்சர் சண்முகம். காலையில் பார்த்தால் அணை என்பார். ராத்திரியில் பார்த்தால் சுவர் என்பார். அப்படி ஒரு மனிதர்தான் சி.வி.சண்முகம்.

 

25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. அணை உடைந்ததும், திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல மாட்டிக்கொண்டார் சண்முகம்.

 

நாங்கள் இன்னமும் அணையைத் திறக்கவில்லையே என்றும் சொல்லியிருக்கிறார். 20.12.2020 அன்று திறந்து வைத்துள்ளார்கள். அமைச்சரும் அந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

(திறப்புவிழா பற்றிய காணொலி காண்பிக்கப்பட்டது)

 

நல்லவேளை, நாங்கள் இன்னமும் அணையே கட்டவில்லையே என்று சண்முகம் சொல்லவில்லை. ஒரு படத்தில் வடிவேலு சொல்வார், கிணத்தைக் காணோம் என்று. அதைப் போல பேசி வருகிறார் சண்முகம்.

 

ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்தகாரர் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இவை கண்துடைப்பு நடவடிக்கைகள்.

 

‘ரயில் எஞ்சினைத் திருடியவர்களை விட்டுவிட்டு, கரித்துண்டு திருடியவனைப் பிடித்துக் கொண்டார்கள்’ என்று ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் கலைஞர் எழுதிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. சில வாரங்கள் ஆனதும் அவர்களுக்கு மீண்டும் வேலை தரப்பப்பட்டு விடும். அந்த ஒப்பந்தகாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

 

ஓராண்டுக்கு முன்னால் செஞ்சியில் ஒரு ஆண்கள் பள்ளியின் செப்டிக் டேங் உடைந்தது. அதற்காக அந்த ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டாரே? அதுபோல் இந்தத் தடுப்பணை கட்டியவரை கைது செய்ய இந்த அரசாங்கம் தவறியதற்கு என்ன காரணம்? பொதுப்பணித்துறையை வைத்திருக்கும் பழனிசாமி இதற்குப் பதில் சொல்வாரா? எல்லாம் தெரிந்த மேதாவி சி.வி. சண்முகம் பதில் சொல்வாரா?

 

இந்தக் கூட்டத்தின் வாயிலாக சி.வி.சண்முகத்துக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் பதவி, மரியாதைக்குரியது. அந்த மரியாதையைக் காப்பாற்றும் வகையில் நடந்துகொள்ளுங்கள், பேசுங்கள்.

 

என்னை ஒருமையில் சி.வி.சண்முகம் பேசுவதற்காக எனது தகுதி குறைந்துவிடப் போவதில்லை. பேரறிஞர் அண்ணா ஒரு கதை சொல்வார். கோவில் யானை ஒன்றைக் குளிப்பாட்டி பாகன் அழைத்துச் சென்றபோது, எதிரே சாக்கடையில் விழுந்து உருண்டுவிட்டு வந்த பன்றியைப் பார்த்து யானை ஒதுங்கிச் சென்றதாம். அப்போது யானை தன்னைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிச் செல்வதாக பன்றி நினைத்துக்கொண்டதாம். அதுபோலத்தான் இவர்களைப் பார்த்து நாம் ஒதுங்கிச் செல்கிறோம்.

 

சி.வி.சண்முகம் அவர்களே… உங்களை நோக்கி மைக் நீட்டுவது பேசுவதற்குத்தானே தவிர, வாந்தி எடுப்பதற்கு அல்ல. திமுகவுக்கு மானமில்லையா என்று கேட்கும் சண்முகம் அவர்களே! உங்களைக் கொலை செய்ய ஆள் அனுப்பியவர் வீட்டில் தலைவாழை இலை போட்டு சாப்பிடும்போது வெட்கமாக இல்லையா? மானம் உங்களுக்கு இன்னமும் இருக்கிறதா? இல்லையா?

 

காலையில் சின்னம்மா... மாலையில் அம்மா... மறுநாள் காலையில் அம்மம்மா.. அடுத்தநாள் எந்தம்மா? என்று நித்தமும் உளறித்திரியும்போது வெட்கம் இருந்ததா, இல்லையா?

 

அம்மா அம்மா என்று சொல்லும் சண்முகம், அந்த அம்மாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை விலக்க, கண்டுபிடிக்க முயற்சி செய்தாரா?

 

சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணனை குற்றம்சாட்டி பேட்டி கொடுத்தாரே? துணைமுதலமைச்சராக இப்போது இருக்கும் பன்னீர்செல்வத்தை கருங்காலி, துரோகி என்று சொன்னதும் அவர்தான்! இன்றைக்கு இருவரும் ஒரே அமைச்சரவையில் எப்படி இருக்கிறீர்கள்?

 

2012 ஆம் ஆண்டு சண்முகத்திடம் இருந்த அமைச்சர் பதவியையும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறித்தார். எதற்காகப் பறித்தார் ஜெயலலிதா? சொல்வாரா சண்முகம்?

 

பத்திரப்பதிவுத் துறையில் அவர் புகுந்து விளையாடத் தொடங்கியது மட்டுமல்ல, அதிகாரிகளையும் கண்டவாறு திட்டியதால்தான் அவரது பதவியைப் பறித்து மூலையில் உட்கார வைத்தார் ஜெயலலிதா.

 

முந்தைய ஆட்சிக் காலத்தில் அமைச்சராக அவரால் ஆக முடியவில்லை. இம்முறை கருணை அடிப்படையில் மாவட்ட கோட்டாவில் மந்திரியானவர்தான் சண்முகம். இத்தகைய வரலாறுகள் அனைத்தும் மாவட்டத்து மக்களுக்கும் தெரியும். தமிழ்நாட்டுக்கும் தெரியும்.

 

தனது பதவியைப் பயன்படுத்தி இந்த மாவட்டத்து மக்களுக்கு செய்தது என்ன? என்று நான் கேட்ட கேள்விக்கு இதுவரை சண்முகத்தால் பதில் சொல்ல முடிந்ததா? ஊருக்கு சவால் விடுவது இருக்கட்டும்! சொந்த ஊருக்கு என்ன செய்தீர்கள் அதை முதலில் சொல்லுங்கள்.

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது தெருத்தெருவாகப் போய், நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பழனிசாமி சொன்னாரே. துரும்பையாவது நகர்த்தினீர்களா?

 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது விழுப்புரம் நகரத்துக்கு விரிவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் வரும் என்றீர்கள். டெண்டர் விட்டு ஒன்றரை ஆண்டாகிவிட்டது. ஏன் இதுவரை பணிகள் தொடங்கவில்லை?

 

விழுப்புரம் நகராட்சியையாவது, சிறப்புநிலை நகராட்சி ஆக்கினீர்களா? அதுவும் இல்லை! பத்து ஆண்டுகள் ஆகியும் விழுப்புரத்துக்கு சுற்றுவட்ட சாலை வந்ததா? இல்லை!

 

முதலமைச்சர் ஒரு உதவாக்கரை! மந்திரிகள் உளறுவாயர்கள்! இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான தேர்தல்தான் இந்தத் தேர்தல். இவர்கள் பொதுமக்களின் குறைகளைக் கேட்கவும் மாட்டார்கள். பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கவும் மாட்டார்கள். இவர்கள் மக்களைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள். மக்களோடு இருக்கவுமாட்டார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

 

கழக ஆட்சி மலரும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி. வணக்கம்.” இவ்வாறு நிறைவுரை ஆற்றினார்

 

சார்ந்த செய்திகள்