சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.
“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம். எங்க அப்பா கேப்டன், விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய், இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.
நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு. என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது, அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல. ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான், கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.
இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி. இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல, அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு. அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும், சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.
இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா, எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.