திண்டுக்கல் மாநகராட்சி கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 11 வார்டுகளை திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. மீதமுள்ள 37 வார்டுகளில் திமுக எதிர்க்கட்சியான அதிமுகவை எதிர்த்து நேரடியாக போட்டி போடுகிறது. இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பெண் வேட்பாளர்கள் வார்டுகளில் களம் இறங்கி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
10-ஆவது வார்டில் களமிறங்கியுள்ள தி.மு.க.மாநகர வேட்பாளரான பானுப்பிரியா தினசரி காலையிலும் மாலையிலும் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதேசமயம், இந்த வார்டு அதிமுகவுக்கும் சாதகமான வார்டு என்பதால், 10வது வார்டை தக்கவைக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியும் நேரடியாக களமிறங்கி தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தப் பகுதிக்கு நன்கு அறிமுகமான முன்னாள் நகர்மன்றத் தலைவர் நடராஜன் உள்பட வார்டு பொறுப்பாளர்களும் வீதி வீதியாக சென்று வாக்காளர்களைச் சந்தித்து உதயசூரியனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
வடக்குத் தெருவில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திமுக வார்டு பொறுப்பாளர் நடராஜன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், வார்டு பொறுப்பாளர்களான சுல்தான், மாணிக்கவாசகம், செல்வம், கணேசன், பீர்முகமது, ஜெயராமன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.