13.06.2019 அன்று பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் தலைமையில் கூடிய விசிக உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. நன்றி அறிவிப்பு :
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத அளவுக்கு வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியைத் தந்த தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு இந்த உயர்நிலைக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இந்தியா முழுவதும் அடித்த பாஜக அலையைத் தடுத்து நிறுத்தி இது சமூக நீதியின் மண் என்பதை உணர்த்தியதோடு, தமக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை சீரழித்துவிடாமல் சனாதன சக்திகளைத் தடுக்கவேண்டும் என்ற ஆணையையும் புதிய உறுப்பினர்களுக்குத் தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். விசிக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதை மனதில்கொண்டு பணியாற்றுவார்கள் என இந்த உயர்நிலைக்குழு உறுதியளிக்கிறது.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஒடுக்கப்பட்ட மக்களை முகாமையாக அணிதிரட்டும் கட்சியொன்றின் இரண்டு உறுப்பினர்கள் மக்களவையில் இடம்பெறுவதற்கு உத்திகளை வகுத்துச் செயல்படுத்திய தலைவர் எழுச்சித் தமிழருக்கு இந்த உயர்நிலைக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
2. உள்ளாட்சித் தேர்தல் :
2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை ஆளும் அதிமுக அரசு தோல்வி பயம் காரணமாகத் தொடர்ந்து தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறது. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தியும்கூட தேர்தல் நடத்தாமல் சாக்குபோக்குகளைக் கூறி வந்தது. இப்போது ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்தப்போவதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். மீண்டும் கால நீட்டிப்புச் செய்யாமல் குறிப்பிட்ட மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு இதுவரை ஆணை வெளியிடவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும் என இந்த உயர்நிலைக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
3. திமுக தலைவருக்கு வேண்டுகோள்:
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும்; கல்வியைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து விலக்கி சனாதனவாதிகளின் எண்ணத்துக்கேற்ப மாற்றியமைத்திருக்கும் புதிய கல்விக் கொள்கையையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு நம் மீது திணித்துள்ள நிலையில் இந்த ஆபத்துகள் குறித்து மக்களிடம் பரப்புரை மேற்கொள்ளவும், போராட்டங்களைத் திட்டமிடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைக் கூட்டுமாறு கூட்டணியின் தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த உயர்நிலைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
4. விருதுகள் வழங்கும் விழா:
விசிக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் விருதுகள் வழங்கும் விழாவை ஜூலை 14 ஆம் நாள் சென்னையில் நடத்துவதென இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது.