Skip to main content

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்ட சாத்தான்குளம் சம்பவத்தைப் போன்ற அதிர்ச்சி வீடியோ!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

vck

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு எஸ்.ஐ.-கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியிடை நீக்கம் போதாது, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குக் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.  

 

இந்த நிலையில் வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து அது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்திற்கு இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திய சாத்தான்குளம் அரச பயங்கரவாதம் என்றும், இது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த கொடூரமென சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. எங்கே நடந்திருந்தாலும் இது காவல் துறையின் அருவருப்பான அரசவன் கொடுமை! அரச பயங்கரவாதம் என்பது  கட்டமைப்புசார் பயங்கரவாதம். சாதி, மத, இனவெறி பயங்கரவாதக் கொடூரங்களையும்விடக் கொடியது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்