விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தோடு பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (07.02.2021) மற்றும் இன்று (08.02.2021) ஆகிய இரண்டு நாட்கள் கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 7-ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னரில் பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் மக்கள் மத்தியில் பேசுகையில், “நீங்கள் கொடுக்கும் எழுச்சியான வரவேற்பை பார்க்கும்போது நீங்கள் எல்லோரும் முடிவு பண்ணிட்டிங்க என்பது நன்றாகத் தெரிகிறது. உதயசூரியனுக்கு எல்லோரையும் வாக்களிக்க வைக்கவேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். இந்தத் தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும்.
அதேபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை விரட்டியடிக்கும் வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். மோடியையும் பி.ஜே.பி.யையும் எடப்பாடி பழனிசாமியையும் மொத்தமாக விரட்டி அடித்தீர்கள்.
எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மண்டியிட்டு தவழ்ந்துசென்று திருமதி சசிகலா காலில் விழுந்து பதவிபெற்றார். ஆனால், இப்போது எடப்பாடி என்ன சொல்கிறார்? நான் மக்களால் முதல்வரானேன் எனக் கூறுகிறார். மண்டிபோட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி, இப்போது மாத்தி பேசுகிறார். இதை நான் பேசியதற்கு என் மீது வழக்குப் போட்டுள்ளனர். எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க நான் தயார். ஏன் என்றால் நான் கலைஞர் பேரன். ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.
தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா வருகையொட்டி நினைவிடத்தை மூடி வைத்துள்ளார். ஏன் என்றால், அவர் வந்துவிட்டால் மீண்டும் சசிகலா காலில்தான் விழவேண்டும் என்று அச்சப்படுகிறார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை எளிய மாணவர் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மாநில அரசுக்கு கவலை இல்லை. எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவ மாணவிகளின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். திமுக ஆட்சியில் கொடுத்த இலவச மின்சாரம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்களுக்குக் கிடைக்கிறதா?
திமுக ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் தொழில்துறைகள் எல்லாமே இங்கு மூடிவிட்டு வேறு மாநிலம் நோக்கிச் சென்றுவிட்டன. காரணம் எல்லாத் துறையிலும் கமிஷன், லஞ்சம்.
அரவக்குறிச்சியில் பேருந்து நிலையம், தொழிற்சாலை, அரசு கல்லூரி வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.
கரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் வந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அரவக்குறிச்சி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும்போது அப்பகுதியில் உள்ள பெத்தநாம்கோட்டை கிராமத்தில் உள்ள செங்காந்த மலர் விவசாயிகளைப் பார்த்து குறைகளைக் கேட்டறிந்தார் அதன் பிறகு அப்பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணைக்குச் சென்று பார்வையிட்டு ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொஞ்சினார். பின்னர், அந்த விவசாயிகளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.