கோவையில் நேற்று அரசு சார்பாக நடந்த திட்டப்பணிகள் துவக்கி வைப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாவட்டத்தில் உள்ள 70 இணையர்களுக்கு இலவசமாக திருமணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவின் கழக முன்னோடிகள் 2000 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொற்கிழிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதிலும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், "வெறுப்பு அரசியல் நடத்தும் பாஜகவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக மக்களும் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களைத் துன்புறுத்தி மாநிலத்தை விட்டு விரட்டுவதாக பொய்யை பரப்புகிறார்கள். இதற்கு எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக மக்களும் தக்க சரியான நேரத்தில் சரியான பதிலடி தருவார்கள். கோயம்புத்தூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை அல்ல, திமுகவின் கோட்டை என்பது கடந்த உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்" என்று பேசினார்.