நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். மேலும் தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இதனையடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் கட்சியின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த உறுதிமொழியை அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க விஜய், தொண்டர்கள் மற்றும் மேடையில் இருந்த கட்சியின் நிர்வாகிகளும் தங்கள் வலது கையை நெஞ்சில் வைத்தபடி இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டர்.
மாநாட்டில் வாசிக்கப்பட்ட உறுதிமொழி, “தமிழக வெற்றிக் கழகம் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும். நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்று வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணி காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கப் பாடுபடுவேன். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.