Skip to main content

“கே.சி.ஆர். காங்கிரஸாருடன் பேசியிருக்கிறார்” - உண்மையை உடைத்த டி.கே. சிவக்குமார்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“K.C.R. has spoken to the Congress” - D.K. Sivakumar who broke the truth

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன்படி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அண்மையில் நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி தெலங்கானா மாநில தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த 5 மாநிலத் தேர்தலின் கருத்துக்கணிப்புகளும் அன்று மாலையில் இருந்து வெளி வரத் தொடங்கின. 

 

கருத்துக்கணிப்பில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. மிசோரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் இசட்.பி.எம் எனும் மாநில கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஐந்து மாநிலத் தேர்தலில், மிசோரம் தவிர்த்து மற்ற நான்கு மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (டிசம்பர் 3ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் இருந்து இருமுறை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் முதல்வர் கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ். இந்த முறை தோல்வியைத் தழுவலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அங்கு குதிரை பேரம் மற்றும் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் எனக் காங்கிரஸ் தரப்பில் யூகித்து, தெலுங்கானாவில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ.க்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெலுங்கானா மாநிலத்திற்கு இன்று சென்றுள்ளார். 

 

“K.C.R. has spoken to the Congress” - D.K. Sivakumar who broke the truth

 

முன்னதாக கர்நாடகாவில், டி.கே. சிவக்குமார் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், “பி.ஆர்.எஸ். எங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளன. குறிப்பாக முதலமைச்சரான கே.சி.ஆர். அவராகவே எங்கள் கட்சியினருடன் நேரடியாகப் பேசியதாக எங்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

 

இது என் கட்சி அதன் காரணமாக நான் தெலுங்கானாவிற்கு செல்கிறேன். கர்நாடகா தேர்தலின்போது, தெலுங்கானா காங்கிரஸ் முழுவதுமாக எங்களுடன் இருந்தது. அதனால், தற்போது அங்கு நான் செல்கிறேன். தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். எங்கள் கட்சி வெற்றி பெறும் என்பது உறுதி அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்