புதுச்சேரி தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தமிழ்மாறன் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முருகசாமி ஆகியோரை ஆதரித்தும், கடலூர் தொகுதி வேட்பாளர் காசி. தங்கவேலை ஆதரித்தும் டி.டி.வி.தினகரன் புதுச்சேரி, கடலூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் இரண்டு சாமிகள் சண்டை போட்டுகொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படைய செய்துள்ளார்கள். மக்கள் சாமிகளை நம்பாமல் புதிய மாற்றத்திற்கான வழியை தேட வேண்டும்" என்றார்.
அரியாங்குப்பம் - கடலூர் சாலையில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிடிவி தினகரன் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரச்சார வாகனத்தை ஓரமாக செல்லும்படி கூறியதால் தினகரன் ஆதரவாளர்கள் கோபம் அடைந்தனர். இதனால் அரியாங்குப்பம் போலீசாருக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 'போலீஸ் அராஜகம் ஒழிக' முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கடலூர் வந்த தினகரன், கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய ஊர்களில் பேசினார். அப்போது அவர், "கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக வாக்கு வங்கி குறைந்துவிட்டது. எனவே பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து மீடியாக்கள் மூலமாக வெற்றி பெற போவதாக மாயையை ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதால் தற்போது நாங்கள் இந்துகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.
பதினைந்து ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த நன்மையும் திமுக செய்யவில்லை. சென்ற தேர்தலில் விஜயகாந்தின் அரசியலை முடித்துவைத்த திருமாவளவனும், வைகோவும் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை இந்த தேர்தலில் முடித்துவைத்து விடுவார்கள். ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போனவர்கள் காங்கிரஸ் - திமுக. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதையும் காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. கலைஞர் தமிழர்களின் பாதுகாவலன் என்று கூறி ஏமாற்றியது போல ஸ்டாலினும் பேசி ஏமாற்ற பார்க்கிறார்.
எடப்பாடி கம்பனியின் ஆட்டத்தை முடிப்பதற்கான வாய்ப்பை மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மானங்கெட்ட ஆட்சியாளர்கள் எனக் கூறிய பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த இரண்டு அணிகளையும் தமிழக மக்கள் விரட்டியடிக்க வேண்டும்" என்றார்.