Skip to main content

தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து களமிறங்கப் போகும் டிடிவி தினகரன்? தேனியில் பரபரப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
ad

தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 19 தொகுதிகளை தி.மு.க.தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதின் பேரில் மீதி உள்ள 21 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. களமிறங்கி உள்ளது. அதில் தேனி பாராளுமன்ற தொகுதியை ஆளுங்கட்சியான தி.மு.க. தக்க வைத்துள்ளது. இந்த தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறுசட்டமன்ற தொகுதியை கொண்டதுதான் தேனி பாராளுமன்ற தொகுதியாக இருந்து வருகிறது.

இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தும் பெற்றுள்ளது. இத்தொகுதியில் முக்குலத்தோர் சமூத்திற்கு அடுத்தபடியாக பட்டியலின சமூகத்தினர், கவுண்டர், நாயக்கர், செட்டியார், பிள்ளைமார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் முஸ்லிம், கிறித்துவர்களும் வசித்து வருகிறார்கள். 

இத்தொகுதியை கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கியதின் பேரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஓபிஎஸ் மகனான ஓபிஆர்இடம் தோல்வியை தழுவினார். ஆனால் இந்த முறை காங்கிரஸ் இத்தொகுதியை கேட்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆளுங்கட்சியான தி.மு.க. இத்தொகுதியில் போட்டிபோட முடிவு செய்ததின் பேரில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வனை வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் தங்க தமிழ்ச்செல்வன்(டிடிஎஸ்) ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியமானார்.

அதைத் தொடர்ந்து தான் கட்சி வளர்ச்சிக்காக தேனி மாவட்டத்தை இரண்டாக பிரித்து வடக்கு மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச்செல்வனையும், தெற்கு மாவட்டச் செயலாளராக கம்பம் இராமகிருஷ்ணனையும் முதல்வர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தான் முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ்-சை எதிர்த்து அரசியல் செய்து கொண்டு கட்சியையும் வளர்த்துக் கொண்டு தொண்டர்களையும் அரவணைத்து வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அப்படியிருந்தும் தொய்வில்லாமல் தொடர்ந்து கட்சிப் பணியாற்றிக் கொண்டு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் தொகுதி பொறுப்பு அமைச்சரான ஐ.பெரியசாமியிடமும் நெருக்கமாக இருந்து வந்தவர்தான் இந்த பாராளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்ததின் பேரில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் டிடிஎஸ்-சை வேட்பாளராக அறிவித்தும் இருக்கிறார்கள். அதைக்கண்டு தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த உபிகளும் உற்சாகமடைந்து ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து டிடிஎஸ்-ன் வெற்றிக்காக தேர்தல் களத்திலும் குதித்துள்ளனர்.

TTV Dhinakaran to contest against Thangatha Michel Van in Theni constituency

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், உசிலம்பட்டி மகேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், நாராயணசாமி உட்பட சில பொறுப்பாளர்கள் சீட் கேட்டு இருந்தனர். இதில் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளரான நாராயணசாமியை வேட்பாளராக இபிஎஸ் அறிவித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் களமிறங்கி உள்ள நாராயணசாமி 82 முதல் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்று முறை சீட் கேட்டும் இருக்கிறார். அதோடு தொடர்ந்து எம்.பி.சீட்டும் கேட்டு வந்தார். அதன் அடிப்படையில் தான் அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். ஆனால் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் நன்கு அறிமுகமில்லாத வேட்பாளராக இருக்கிறார் என்ற பேச்சும் ர.ர.க்கள் மத்தியில்இருந்து வருகிறது.

ஆனால் இத்தொகுதி அ.திமுக கோட்டையாக இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது தொகுதி மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் நன்கு அறிமுகமில்லாதவரை இ.பி.எஸ். அறிவித்துவிட்டார் என்ற பேச்சு இப்பவே ர.ரக்கள் மத்தியில் ஒருபுறம் பேசப்பட்டும் வருகிறது. இருந்தாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு ர.ர.க்களும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.

TTV Dhinakaran to contest against Thangatha Michel Van in Theni constituency

இந்த நிலையில், பிஜேபி கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளரான டிடிவி தினகரன் இத்தொகுதியில் மீண்டும் பிஜேபி கூட்டணியுடன் களமிறங்கப் போவதாக ஒரு பேச்சும் பரபரப்பாக இருந்து வருகிறது. அதோடு தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவுடன் டி.டி.வி.க்கு வீடு பார்த்தும் வருகிறார்கள். இப்படி டி.டி.வி.தினகரன் மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விசயம் தொகுதி மக்களிடமும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு டிடிவி எம்.பி.யாக இருந்தபோது நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை பணத்தை வாரி இறைத்து மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் நல்ல பெயரும் எடுத்து இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் டிடிவி இத்தொகுதியில் போட்டிபோட முடிவு செய்து இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. அதன்மூலம் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே தான் கடும் போட்டியும் நிலவப் போகிறது என்ற பேச்சு தொகுதியில் உள்ள கரைவேஷ்டிகள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.

சார்ந்த செய்திகள்