வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இது கடந்த முறை நடந்த தேர்தலை விட 4 இடங்கள் குறைவாகும். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிபுரா பூர்வகுடிகள் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டும் வென்றுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் முதல்வராக இருந்த மாணிக் சாகாவுடன் மத்திய அமைச்சராக உள்ள பிரதிமா பௌமிக் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இதனால் முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்க அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை பாஜகவின் டெல்லி தலைமை திரிபுராவிற்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக பாஜகவின் டெல்லி தலைமை நடத்திய தீவிர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மீண்டும் திரிபுராவின் முதல்வராக மாணிக் சாகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக மாணிக் சாகா நாளை பதவியேற்க உள்ள நிலையில், மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். திரிபுரா மாநில அமைச்சரவை பதவியேற்பானது நாளை நடைபெற உள்ளது.