“மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்” என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்.
ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ பரப்புரை செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது.
மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாம். பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.
பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? ரவி மறந்து விட்டாரா? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சியை ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த ரவி மறந்து விட்டாரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை?
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் "எந்நன்றி கொன்றார்க்கும்" குறளை படித்திருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.