![Thol. Thirumavalavan](http://image.nakkheeran.in/sites/default/files/inline-images/THOL.THIRUMAVALAVAN%20600.jpg)
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்தப் பதினோரு பேரையும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யுமென்று உறுதியாக நம்புகிறோம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திரு எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பதினோரு பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒரு உறுப்பினர் கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் அவரது பதவி பறிக்கப்படும் என கட்சித்தாவல் தடை சட்டம் கூறுகிறது. இதைத் தெரிந்தே ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அப்படி இருந்தும் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான், திமுகவும் வேறு சிலரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்கப்பட்டிருக்கிறதா? அது தகுதி நீக்கத்துக்கு உரியதுதானா ? என்று தான் உயர்நீதிமன்றம் ஆராய்ந்திருக்க வேண்டும். அங்கே வாதாடிய வழக்கறிஞர்களும் அதைத்தான் வலியுறுத்தினார்கள். ஒ.பன்னீர்செல்வமும் மற்றவர்களும் தாங்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்று மறுப்பு எதுவும் சொல்லவில்லை. எனவே, உயர்நீதிமன்றம் அவர்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கவேஎண்டும்.
சபாநாயகர் தனது பொறுப்பை நிறைவேற்றாதபோது நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சாபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களைச் சொல்லி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தமது பொறுப்பை உயர்நீதிமன்றம் தட்டிக்கழித்திருப்பதாகவே இதைக் கருதத் தோன்றுகிறது.
பாஜக முட்டுக்கொடுப்பதால் தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சி நீடிக்கிறது என மக்களிடம் பரவலான கருத்து உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் அது தலையிட்டு செல்வாக்கு செலுத்துகிறது என்றும் மக்கள் கருதுகின்றனர். நீதித்துறைமீதான நம்பிக்கை மட்டும்தான் இப்போது எஞ்சி நிற்கிறது. இத்தகைய தீர்ப்புகளால் அந்த நம்பிக்கையும்கூட பொய்த்துப்போய்விடும் பொலத் தெரிகிறது.
இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்தப் பதினோரு பேரையும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யுமென்று உறுதியாக நம்புகிறோம். ’தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பதை உணர்ந்து உசநீதிமன்றம் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.