Skip to main content

“மோடி கும்பல் போன்ற சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan says country should be saved from exploiters like Modi gang

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, கடலூர் தொகுதி எம்எல்ஏ ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் எம்.பி, எம்எல்ஏக்கள் ஐயப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

இந்தக் கூட்டத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பேசியதாவது, “தேர்தல் நேரமாக இருப்பதால் அனைவரும் ஓட்டு மட்டுமே கேட்க வேண்டும். அரியலூர் மாவட்டத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் இடையே அமைச்சர்களுக்குள் யார் எவ்வளவு வாக்குகள் வாங்குவது என்பது குறித்து சவால்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். மக்களின் மொழியில் பேசி நிர்வாகிகளை உழைக்க செய்பவர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். அரியலூரில் கடந்த தேர்தலின்போது பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி வாக்கு சேகரித்தவர் அமைச்சர் சிவசங்கர். திமுகவினர் எப்படி செயல் திட்டங்களை வகுக்கிறார்களோ, அதனை முன்னெடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும்.

Thirumavalavan says country should be saved from exploiters like Modi gang

இந்த கூட்டணி சமூகநீதி அடிப்படையிலான கூட்டணி. அமைதி, சமூக நல்லிணக்கம் தான் முதன்மையானது. இதை நான் தேர்தலுக்காக சொல்லவில்லை. இந்த தொகுதியில் தொழில், வியாபாரம், சமூக அமைதி போன்றவை இதுவரை பாதிக்கப்பட்டதா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாஜக சமூகநீதிக்கு எதிரான கட்சி. சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு போன்ற எந்த திட்டங்களுக்கும் திருமாவளவன் எதிராக நின்றதில்லை. மண்டல் பரிந்துரையை அறிவித்தவுடன் அதை ஏற்று அதை ஆதரித்து மதுரையில் பேரணி நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

மண்டல் கமிஷனை கொண்டு வந்த வி.பி. சிங்குக்கு சென்னையிலே ஸ்டாலின் சிலை அமைத்தார். அதற்கு காரணமாக இருந்ததில் இந்த திருமாவளவனும் ஒருவன். ஆனால் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதற்காக வி.பி. சிங் அரசை கவிழ்த்தவர் பாஜகவின் அத்வானி. சமூக நீதிக்கு எதிரான கும்பலோடு திருமாவளவன் கைகோர்க்க மாட்டான். பாஜகவோடு பாமக சேர்ந்துள்ளது. சமூகநீதிக்கு எதிரான கட்சியோடு பாமக கூட்டணி சேர்ந்து இருக்கிறது.

தன்னுடன் கூட்டணி சேரும் கட்சிகள் நீர்த்துப் போகச் செய்யும் கட்சி பாஜக. ராம்விலாஸ் பஸ்வான் கட்சி, சிவசேனா போன்ற கட்சிகள் அதற்கு உதாரணம். ஓபிசி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையில் உள்ள கிரிமிலேயரை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கூறி பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் மனு கொடுத்தவன் நான். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் ஓபிசி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என போராடியதும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் விசிக இணைந்து கொண்டது. அதன் காரணமாகவே இன்று 12 ஆயிரம் ஓபிசி மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. பாஜகவுக்கு எந்த வாக்கு வங்கியும் இல்லை. பாஜக வாங்கும் வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள் ஆகும். அவர்களை வளர்க்க பாமக அவர்களோடு கூட்டணி சேர்ந்துள்ளது. இங்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு ஒரு சங்கடம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் விஷ்ணுபிரசாத்தை அவர் வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது அக்கா செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொறுப்பு வகிப்பதால், அங்கு விஷ்ணுபிரசாத் அக்கா சௌமியா அன்புமணியை தோற்கடிக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்து கொண்டிருப்பது ராகுல்காந்தி மட்டுமே. பெரும் கும்பலிடம் இருந்து, மோடி கும்பல் போன்ற சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்” எனப் பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்