திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் நகரச் செயலாளர் புறக்கணித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வத்தலக்குண்டு பேரூராட்சியில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து, 18 வார்டுகளையும் திமுகவிடம் பறிகொடுத்தது. அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் டெபாசிட் போனது. இது அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று ஜெயலலிதா பிறந்த நாளை இன்று, அதிமுக நகர சிறுபான்மை அணி செயலாளர் நாகூர் கனி காந்திநகரில் கொண்டாடினார். விழாவிற்கு நகரச் செயலாளர் பீர் முகமதுவை அழைக்காமல் தன்னுடன் சேர்த்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை நடத்தினார்.
இதேபோல் கடைவீதியில் பொங்கு இளங்கோ, சுரேஷ், ஹபீப் ராஜா, சந்திரசேகர், குமரேசன், முத்துச்சாமி என தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்கள் கிளைச் செயலாளர்கள் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த மகளிர் அணி நிர்வாகி புவனேஸ்வரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்கு காரணம், வத்தலக்குண்டு அதிமுக நகரச் செயலாளர் பீர்முகமது தேர்தலில் தான் ஜெயித்தால் மட்டும் போதும் என்ற நோக்கில் மற்ற வேட்பாளர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அதனால், வேட்பாளர்கள் முதல் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். தோல்வியை தழுவிய வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் நகரச் செயலாளர் பீர் முகமதுவை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக இச்செயல் உள்ளது என வத்தலக்குண்டு அதிமுகவினர் பேசிக்கொள்கின்றனர்.