தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கவும் பாஜக முயன்று வருவதாகக் கூறி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை எழுப்பினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி, “தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்பட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிரான நிலையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களின் பேச்சுகள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துகின்றனர். இதனையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் கூட எழுகிறது. அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். மேலும் இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு பலம் வாய்ந்த அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.