கூட்டணியில் இருக்கும்போது அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது என மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை திமுக வெளியேற்றி தனித்துப் போட்டியிடுமா எனக் கேட்கின்றனர். அதுபோன்ற ஒரு கருத்தை முதல்வரும் மூத்த நிர்வாகிகளும் தெரிவிக்கவில்லை. மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி தொடரும் என்றுதான் முதல்வர் சொல்லி வருகிறார்கள். இந்த கூட்டணி உடையட்டும் என்று நினைக்கும் மதவாத சக்திகளுக்குத் தீனி போடும் வகையில் இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. அது வதந்தியாகவே இருக்கட்டும்.
கூட்டணியில் இருக்கும்போது அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பொதுவுடைமை இயக்கங்களைப் பொறுத்தவரை சில நியாயமான கோரிக்கைகள் இருக்கிறது. அதற்குப் போராடுகிறார்கள். உடனே கூட்டணியை விட்டு வெளியேறி விடுவார்கள் எனச் சொல்லுவது தேவையில்லை.
ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு முன் 17 பேர்தான் இறந்து இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 30க்கும் மேலாகிவிட்டது. அவசரச் சட்டம் கொண்டு வந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஆளுநர் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு விளக்கமளித்து அமைச்சர் ரகுபதி பதிலளித்தார். அதன் பின்னும் கூட ஒப்புதல் அளிக்கவில்லை. இது சாபக்கேடு. ஆளுநரின் கடமைகளை அவர் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட இயக்கத்தின் சார்பாக அவர் குரல் கொடுப்பது ஆரோக்கியமானதல்ல” எனக் கூறினார்.