அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவரும் சூழலில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அ.தி.மு.க.வின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து எனது ஆதரவைத் தெரிவித்தேன். என்னுடைய ஆதரவு ஓபிஎஸ்-க்குதான். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பல சோதனைகளைச் சந்தித்தது. இரட்டை தலைமை இறுதி ஆன பிறகு, எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அதிமுக கட்சி செயல்பட துணை நின்றவர் ஓபிஎஸ். சுயநலம் இல்லாமல் செயல்பட்டவர்.
யாரையும் அரவணைத்துச் செல்லாத ஜனநாயக பண்பற்ற மனிதராக எடப்பாடியை இப்போது எல்லோரும் பார்க்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் இப்போதும் விட்டுக்கொடுத்துப் போனால் எடப்பாடியின் சர்வாதிகார போக்கு அ.தி.மு.க.வை வலிமை இழக்கச் செய்து விடும்.சில நிர்வாகிகள் தவிர்த்து, அ.தி.மு.கவின் தொண்டர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்கவில்லை. அவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபைத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது; மக்கள் செல்வாக்கு இல்லை.
மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இ.பி.எஸ்-க்கு ஆதரவு. தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க.வை முழுவதுமாக வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார். விட்டுக்கொடுக்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினேன். இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் விட்டுத்தரப் போவதில்லை. அதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
கட்சியை நம்பி ஒப்படைத்த சசிகலாவைக் கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது ஓ.பி.எஸ்-ஸையும் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இரட்டை தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுக் குழுவில் ஒற்றை தலைமை என்ற பெயரில் ஓ.பி.எஸ்ஸை நீக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து சசிகலா, தினகரன்,அன்வர் ராஜா போன்றவர்களை நான் சந்திக்கவுள்ளேன். ஒற்றை தலைமை வந்தாலும் ஓ.பி.எஸ் தான் தலைமை இடத்திற்கு வர வேண்டும். பகைவரை கூட மன்னித்து அரவணைத்துச் செயல்படக் கூடியவர் ஓபிஎஸ். ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைவார்கள்" என்று தெரிவித்தார்.