மதுரை விமான நிலையத்தில் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், என் நிலைப்பாடு தற்போது அமைதியாக இருப்பதுதான். சந்தித்துப் பேசியவர்களை வெளியே சொன்னது, ஆடியோ, வீடியோ வெளியிடுவது ஒரு தலைமைக்கான நல்ல பண்பாடு அல்ல. ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்ததை வெளியே சொல்வது, விஜயபாஸ்கரை பார்த்ததாக வெளியே சொல்வது இதெல்லாம் ஒரு தலைமைக்கான நல்ல பண்பாடு அல்ல. அமமுகவில் நிர்வாகம் சரியில்லை. ஒரே ஒரு தோல்வியாக இருந்தாலும் மிகப்பெரிய தோல்வி. பாராளுமன்றத்தில் தோல்வி, 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தோல்வி என்றாலும், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் கவனம் செலுத்தி வேலை பார்த்தும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால் மக்கள் ரசிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
மனக்கசப்பு ஏற்படுவது இயற்கை. மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
இல்லை.
அதிமுகவுடன் இணைவதற்கான முடிவு உள்ளதா?
அந்த முடிவே எடுக்கவில்லை. அந்தக் கட்சியுடன் பேசுகிறார். இந்தக் கட்சியுடன் பேசுகிறார் என்று இவர்களாகவே பரப்பி விடுகின்றனர்.
என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் என்று உங்களை சொல்லியிருக்கிறார் தினகரன்...
அவர் ஒரு கட்சித் தலைவர். ஒரு பண்பாடு இல்லாமல் பேசுகிறார். பொட்டிப்பாம்பாக அடங்குவார் என்றால், நாங்கள் என்ன சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தோமா? அடங்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒரு தலைவர் பேசலாமா? இவரது பேச்சை மக்கள் ரசிக்கவில்லை.
தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை ஏற்க மாட்டாரா?
யாருடைய கருத்தையும் ஏற்க மாட்டார்.
நீங்கள் கொள்கைப்பரப்புச்செயலாளர்...
கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தேவையா? இவ்வாறு கூறினார்.