வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ.வும், ம.ஜ.க. பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கு அன்னிய வருவாயை வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் மலையாளிகளுக்கு அடுத்த படியாக தமிழர்கள்தான் ஈட்டி தந்தார்கள். கரோனா நெருக்கடி காரணமாக இன்று அந்தந்த நாடுகளில் அவர்கள் வேலையிழந்து, வருமானம் இழந்துள்ளார்கள்.
அவர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தனி நிதி ஒதுக்கி விமானம் மற்றும் கப்பல்களில் அரசு செலவில் அழைத்து வர வேண்டும். அவர்கள் இங்கு வந்ததும், கரோனா முன் சிசிச்சைகளை அளித்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பலாம்.
அது போல் தமிழக அரசு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு உயிரூட்டி, தாயகம் திரும்பும் தமிழக தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களை அரசு செலவில் தாயகம் அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜுன் 5, 6 மற்றும் 7 தேதிகனில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பதாகை ஏந்தி சமூக இணையத்தளங்களில் பதிவிடும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் தனது வீட்டு வாசலில் இக்கோரிக்கையின் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். இக்கோரிக்கையை ஆதரித்து இன்று தமிழக அரசியல் தலைவர்களும், ம.ஜ.க. தலைமை நிர்வாகிகளும், தமிழக கொள்கை ஆளுமைகளும், சமூக ஆர்வலர்களும், பதாகை ஏந்தி சமூக இணையங்களில் பதிவிடுவார்கள் என ம.ஜ.க. தெரிவித்திருக்கிறது.