தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து, 15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்காத நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்பு நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பேசும் போது, கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாதுவை கையில் எடுக்கிறார்கள் என பேசினார். ஆனால் கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறுகின்றனர். கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதில் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு தமிழக பாஜக தலைவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.