தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். மேலும், ஒவ்வொரு மாவட்ட மக்களின் குறைகளையும் மனுவாகப் பெற்றுவருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக்குள் உங்கள் குறைகள் சரி செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மூன்று கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இன்று (19/02/2021) முதல் நான்காவது கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக, வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 01.00 மணியளவில், ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.
பெருந்துறையில் இருந்து விஜயமங்கலம் செல்லும் இடைப்பட்ட பகுதியான கடப்பமடை கலைஞர் திடலில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவாகப் பெற்றுக் கொள்கிறார். இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுவாக அளிக்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 22- ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 08.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அந்தியூர் அடுத்த பங்களாபுதூர், புஞ்சை துரையம் பாளையம், டி.என். பாளையம் ஒன்றியம், சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் நடைபெறுகிறது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகிறார்.
இதில் கோபி, பவானி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுவாக அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி, வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் ஆகியோர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.