Skip to main content

“முதல்வர் வேந்தராக இருந்தால் கட்சி நிர்வாகிகள் ஊழல் செய்வார்கள்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Tamilisai soundararajan says If the chief minister is the chancellor, the party executives will be corrupt

 

தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், தமிழக ஆளுநர் பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியிருந்தார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் தொடர்பாகத் தனித் தீர்மானம் கொண்டு வந்து மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”பல்கலைக்கழகத்துக்கு மாநிலத்தை ஆளும் முதல்வர் வேந்தராக இருக்கும் சிறப்பு உள்ளது. முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் சிறப்பாக வளர முடியும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர்கள் வேந்தராக இருந்தால் அரசியல் சாயம் பூசப்படும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் நேற்று (22-11-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆளுநருடன் பேசி சந்தேகங்களை தீர்க்கலாம். ஜெயலலிதா பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அப்போது கூறியபோது திமுகவினர் எதிர்த்தார்கள். 

 

பட்டமளிப்பு விழாவில் நிதியை அறிவித்துவிட்டு முதலமைச்சர் வேந்தராக இருந்தால் இதுபோன்ற நிதியுதவி அளிக்க முடியும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அரசாங்கத்தின் கீழ்தான் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. உயர் கல்வித்துறை அமைச்சர்தான் அதனை நிர்வகித்து வருகிறார். அப்படி இருக்கையில், வேந்தராக இருந்தால்தான் உதவி செய்வேன் என்று முதல்வர் கூறுவது தவறு. 

 

முதலமைச்சர்கள் வேந்தராக இருந்தால் மாவட்டச் செயலாளர்களை துணை வேந்தராக நியமிப்பார்கள். துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை முதலமைச்சரிடம் சென்றால் கட்சி நிர்வாகிகள் துணை வேந்தராக வந்து ஊழல் செய்வார்கள். எனவே, ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பதுதான் சரி. அப்படி இல்லையென்றால் அரசியல் சாயம் பூசப்படும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், என டெல்லி வரை செல்வதை விட ஆளுநருடன் அமர்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு நல்லது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்