வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட சிவகாசி கிழக்கு பகுதி, மேற்கு பகுதி, திருத்தங்கல் கிழக்கு பகுதி, மேற்கு பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி. “விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்; கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப்போய் விடுவார்கள்.
தற்போது கருத்துக்கணிப்பு, கருத்துத் திணிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். நாம் அதை நினைத்து சோர்ந்து விடக்கூடாது. கருத்துக்கணிப்பு என்பது ஒரு ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு நிர்ணயம் செய்யப்படுவது. இப்போது வருவது கருத்துக் கணிப்பு அல்ல; அது கருத்துத் திணிப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட ராஜராஜசோழனுக்கு அடுத்து, ஏரிகளை தூர்வாரி நீர் நிலைகளில் நீரைச் சேமித்து வைத்த பெருமை இ.பி.எஸ்.ஸையே சேரும்.
இன்றைய திமுக ஆட்சியில் கண்மாய்களைத் தூர்வாறுகிறோம், அகலப்படுத்துகிறோம் என்று சொல்லி, அந்த மண்ணைக் கரையில் மெத்தாமல் எடுத்துச் சென்று விடுகிறார்கள். திமுக அரசு குடும்ப அரசியல் செய்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா, அதன்பிறகு வந்த எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியல் செய்தது இல்லை. இ.பி.எஸ். ஆட்சியில் ஜாதி, மத மோதல்கள் இல்லை. அதிமுக, ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. இந்த நிலைப்பாட்டை, சிறுபான்மை மக்கள் அனைவரிடமும் எடுத்துக்கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க வேண்டும்.” என்றார்.