தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்ததினர்.
அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் யாரும் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என்று நான் சொல்லவில்லை எனக்கும் முன்னால் பேசிய ஏழைத்தாய் ஒருவர் சொல்லி விட்டு செல்கிறார். ஆகவே இது மிகவும் தீவிரம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை. ஏனென்றால் திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதி சொற்பொழிவைப் பார்த்தீர்கள் என்றால் ஆளுங்கட்சியின் முதலமைச்சரையும், முதல்வரின் மகனையும் சாடியிருக்கிறார். நம்மை வந்து அந்த கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதில் நாம் சேர மாட்டோம் என்று சொல்கிறார். இந்த கொலை வழக்கில் அரசியல் பின்புலம் இல்லை என ஏன் அதிகாரிகள் இப்போதே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வடசென்னை முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. வடசென்னை பல அராஜகத்திற்கும் பல குற்றங்களுக்கும் புகலிடமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏழைகளுக்குப் புகழிடம் கொடுத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார். ஆகவே உடனடியாக இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் உடனடியாக ஆஜரானது குறித்து ஒப்புக்கொள்ள முடியாது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். நியாயம் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் இதுவே அரசியல் கொலைகளில் கடைசியாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார்.