
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக ஆளுநருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், "தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் அவர்கள் தலைமையில் 21.03.2020 அன்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு என்பது வேதனை அளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நீதியரசர் கலையரசன் ஆணையம் கடந்த 08.06.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது.
இதனையடுத்து தமிழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவு எடுத்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் நலன், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர், மாற்றுத் திறனாளிகள் நலன், வனம், சமூகப் பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 இன் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று, பின்னர்,
12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும், மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும், மேலும், மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசு கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 8,41,251 மாணவர்களில் சுமார் 41 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பயில்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைக்கிறது. இது சமூக சமநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பு ஆண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். தேசிய தகுதிக்காண நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது.
இதனைக் கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநராகிய தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் வைகோ.