
பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை அமைச்சரான ராணா குர்மீத் சிங் ஜோதி, முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான சித்துவை அவரது வீட்டில் சந்தித்ததையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சரவையில் சித்து பங்குபெறலாம் எனப் பேசப்படுகிறது.
பா.ஜ.க.விலிருந்து காங்கிரசில் இணைந்த சித்து, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் உடனான கருத்து வேறுபாட்டால் சிறிது காலம் அமைச்சரவையில் பங்குபெறாமல் இருந்துவந்தார்.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ், சித்து திரும்பவும் கட்சியில் துடிப்பாகச் செயலாற்ற வேண்டுமென விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து அவரை பஞ்சாப் கிரிக்கெட் கழகத்துக்குத் தலைவராக, நியமிக்க மாநில காங்கிரஸ் தீவிரம் காட்டியது. அரசியல்வாதியான அவரை, மாநில கிரிக்கெட் அமைப்புக்குத் தலைவராக நியமிப்பதற்குச் சில எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவரை அமைச்சராக நியமிப்பதென முடிவுசெய்யப்பட்டது.
இதற்கிடையில், சித்துவை பா.ஜ.க.வும் தம் பக்கம் இழுக்க ஆர்வம் காட்டியது. ஆனால், பஞ்சாப்பில் வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் பெரும் கிளர்ச்சி எழுந்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் பக்கம் தாவுவதற்கு சித்து ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம்தான். எனவே விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் மாநில அமைச்சரவையில் சித்துவிற்கு ஒரு இடம் நிச்சயம் என்கிறார்கள் பஞ்சாப் நிலவரங்களை உற்றுக் கவனித்துவரும் அரசியல் நோக்கர்கள்.