சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு போட்டிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போட்டி நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது“ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க காசு இல்லை. பந்தயம் நடத்த மட்டும் காசு எங்கிருந்து வருகிறது. ஃபார்முலா 4 கார் பந்தயம் மேல்தட்டு மக்களின் விளையாட்டு. சைக்கிள் பந்தயம் வைத்தால் கூட நம் பிள்ளைகள் பங்கேற்பார்கள். மிகப்பெரிய சாம்ராஜ்ஜியங்களே வீழ்ந்திருக்கின்றன. இது எத்தனை நாளைக்கு?. இந்த கார் பந்தயத்தால் சென்னையில் போக்குவரத்து ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கார் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு அருகே பல்வேறு குடிசைகள் உள்ளன. பந்தயம் நடைபெறும் இடத்தின் அருகே அரசு மருத்துவமனைகள் உள்ளன. கார் பந்தயத்தின் போது ஒலிப்பெருக்கியின் சத்தம் மருத்துவமனைகள் வரை கேட்கிறது.
விளையாட்டுத் துறை அமைச்சராக இருங்கள், விளையாட்டு அமைச்சராக இருக்காதீர்கள். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அரசுப் பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. அரசுப் பள்ளியில் மேற்கூரை இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய கழிவறைகள் கூட இல்லாத முறையை முதலில் சரி செய்யுங்கள்” எனப் பேசினார்.