அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்ற அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, சென்னை, கோவை மாநகராட்சிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்த மனுவில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணையைக் கைவிட முடிவு செய்துள்ளதாகவும், வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் சாட்சியாக இருந்த சந்திரபோஸ் என்ற ஒப்பந்ததாரரை வீட்டை காலி செய்யச் சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் வேலுமணி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதோடு, விசாரணை அதிகாரி அமைச்சரின் முகவர் போல செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்ற அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, வழக்கை கைவிடுவது தொடர்பாக முடிவெடுத்ததற்கான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் மாதம் 13- ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.