மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், “பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்று கூறியிருந்தார். இது விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
நடிகர் ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தைப் பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “மதத்தின் அடிப்படையில் மனிதனுடைய எண்ணிக்கையை கணக்கிடுவதே தவறு. மதம் மாற்றிக்கொள்ள கூடியது. ஆனால் மொழி மற்றும் இனம் மாற்றிக் கொள்ள முடியாது. இளையராஜா பெரும்பான்மை. யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை. இது மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்கயாவது இருக்கா. என் கட்சியில் சிறுபான்மை பிரிவு என்பது கிடையாது. இனிமேல் சிறுபான்மை என்று யாராவது கூறினால் செருப்பால் அடிப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மொழி உணர்வு, இன உணர்வு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வும், கிறிஸ்தவர்கள் என்ற உணர்வும் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பைத் தரக்கூடியது. அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார்களின் நோக்கம். அதே கருத்தை சீமான் போன்றவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் சங்பரிவார்களுக்குத் துணை போகிற வகையில் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது. சங்பரிவார்கள் என்ன வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகிறார்களோ அதே வெறுப்பு பிரச்சாரத்தை இவர்கள் முன்மொழிகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அவர் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.