இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி .17 கோடி வாக்காளர்களையும், 119 தொகுதிகளையும் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் மூன்றாம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று தெலங்கானா மாநிலம் முழுக் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி., பிரியாங்கா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தான் தெலங்கானாவில் போட்டி. தெலங்கானாவில் மக்களால் வீழ்த்தப்பட்ட பாஜக தேர்தல் களத்தில் ராஷ்டிர சமிதி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பாரத ராஷ்டிர சமிதி செயல்பட்டது. பாஜக - பாரத ராஷ்டிர சமிதி இடையேயான ரகசியக் கூட்டணிக்கு ஆதாரம் உள்ளது.
காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் இருந்து மக்களின் 1 லட்சம் கோடி ரூபாயை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் எடுத்துள்ளார். பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மீது மத்திய விசாரணை அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இது குறித்து விசாரணை அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.