நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் அமமுக கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அமமுக கட்சிக்கு அலுவலகம் கொடுத்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையாவும் விலகுவதாக அறிவித்தார். இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இந்த நிகழ்வுகளுக்கு பிறகு இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. அப்போது கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவதை பற்றி விசாரித்துள்ளார். பின்பு கட்சியில் இனி யாரும் வெளியே போகாமல் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு வேண்டியதை செய்தும், அனுசரித்தும் கட்சியை வழி நடத்துமாறு தினகரனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
தற்போது அதிமுகவினர் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சில நிர்வாகிகளை இழுப்பார்கள் என்றும், ஆட்சி முடிந்த உடன் அதிமுகவில் யார் கட்சியில் செல்வாக்கு மிக்கவர் என்ற போட்டியில் உட்கட்சி பூசல் அதிகமாகும் என்றும் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆட்சி முடியும் வரை அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு செல்பவர்களை பற்றி கவலை படவேண்டாம் என்றும், நான் வெளியே வரும் வரை கட்சியை அனுசரித்து வழி நடத்தினால் போதும் என்றும் தினகரனிடம் சசிகலா தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.