
திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் அதிக கொலைகள் நடைபெறுகிறது. திருநெல்வேலியில் மட்டும் 46 கொலைகள் நடந்திருக்கிறது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வீடியோ போடுகிறார் 'என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை' என்று, அடுத்தநாளே அவர் உயிர் பறிக்கப்படுகிறது. என்ன நடக்கிறது தமிழகத்தில். ஆனால் ரொம்ப இலகுவாக சொல்கிறார்கள் தனிப்பட்ட பிரச்சனைக்கு நடக்கும் கொலைகளை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி எவ்வளவு தவறாக இவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதனால் இன்று தமிழக மக்களின் நலன் காப்பதற்காக நாங்கள் இந்த கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
இதேபோல ஒரு கருப்பு கொடியை வைத்துக் கொண்டு டாஸ்மாக்கை ஒழிப்போம் என உங்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டீர்கள் அல்லவா அதற்கு பதில் சொல்லுங்கள் இப்பொழுது. கனிமொழி சொன்னார்களே தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள் ஏனென்றால் டாஸ்மாக் தான் காரணம் என்றார்கள். அதற்கு பதில் என்ன? தமிழ்நாட்டு மக்கள் நன்றாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பொதுமக்களே உங்கள் பிரச்சனைகள் எவ்வளவோ தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஆனால் இல்லாத ஒரு அறிவிப்பை கையில் எடுத்துக் கொண்டு, இல்லாத ஒரு திணிப்பைக் கையில் எடுத்துக்கொண்டு இவர்கள் இன்று கூட்டம் நடத்துகிறார்கள்.
தமிழக மக்கள் திமுகவை மன்னிக்கவே மாட்டார்கள். காவிரி பிரச்சனைக்கு இதேபோல கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை அழைத்த கூட்டம் போட்டு விடுவீர்களா? காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா? மேகதாது அருகில் அணை கட்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள். என்றாவது உங்களுடைய குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி இருக்கிறீர்களா? கர்நாடக தலைவர்களை அழைத்து வந்து இங்கு கூட்டம் நடத்தினீர்களா? தமிழக விவசாயிகளே உங்களுக்கு கிடைக்க வேண்டிய காவிரியைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருக்கிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தமிழக விவசாயிகளே இவர்களுக்கு உங்களைப் பற்றி கவலை இல்லை'' என்றார்.