தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுள் மறுப்பு, பெரியாரிசம் என்ற பெயரில் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும், பக்தி மார்க்கங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது ஏற்புடையதல்ல. அதிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு என்கிற பெயரில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் இலக்கு வைத்துச் செயல்படுவது மதச்சார்பின்மை கொண்ட நமது தேசத்திற்கு நல்லதல்ல.
அந்தவகையில் தமிழ்க்கடவுள் எம்பெருமான் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை விமர்சனம் என்கிற பெயரில் தரம் தாழ்ந்து இழிவுபடுத்தி "கறுப்பர் கூட்டம்" வலையொளியில் பேசிய சுரேந்திரன் மீது புகார் அளித்த ஓரிரு நாட்களிலேயே அந்த வலையொளி நிர்வாகி செந்தில்வாசன் கைது செய்யப்பட்டு, அதன் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவுபடுத்தி பேசிய சுரேந்திரன் புதுவை அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைய அவரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்திருக்கும் தமிழக காவல்துறைக்கு (!!!!) பாராட்டுகள்.
மேலும் எம்பெருமான் முருகனை இழிவுபடுத்திய நபர்களைக் கைது செய்யாவிட்டால் இஸ்லாமிய பெருமகனார் முகமது நபிகள் குறித்து கார்ட்டூன் போடுவேன் என மிரட்டிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இந்நிலையில் தமிழ்க்கடவுளை, இழிவுபடுத்தியதைக் காரணமாக வைத்து பெரியாரின் சிலைக்கு சாயம் பூசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் "அடிக்கு அடி", "உதைக்கு உதை" என ஒவ்வொரு மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் செயல்படுமானால் அது தேசநலனுக்கு விரோதமாகவே அமையும். எனவே இது போன்ற மக்கள் விரோத சக்திகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
நிற்க...
தமிழ்க்கடவுளான எம்பெருமான் முருகனை இழிவுபடுத்திய நபர்களைக் கைது செய்ய வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்த ஓரிரு நாட்களிலேயே சம்பந்தப்பட்ட நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரையும், அவர் தொடர்புடைய நபரையும் ஓரிரு நாட்களில் கைது செய்த தமிழக காவல்துறையின் வேகம் கண்டு வியக்கிறேன்.
ஏனெனில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் ஊடகத்துறை மீதும், பெண் ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி களங்கப்படுத்தும் நோக்கில் தரம் தாழ்ந்து பதிவிட்டிருந்தார். அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் எனச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் 20.04.2018அன்று முதல் புகார் அளிக்கப்பட்டதோடு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ந்து அவர் மீது புகார் அளித்தனர்.
ஆனால் எஸ்.வி.சேகரை தேடுகிறோம், தேடுகிறோம், தேடிக் கொண்டே இருக்கிறோம் என சுமார் 60நாட்களைக் கடந்து தமிழக காவல்துறை தேடிக் கொண்டே இருந்தது. அவரோ சுதந்திரமாகவே உலா வந்தார். அதன் பிறகு அவரை கைது செய்யாமல் இருக்க 60நாட்களைக் கடந்து ஜாமீன் கிடைத்தது
ஆனால் தற்போது தமிழ்க்கடவுளான எம்பெருமான் முருகன் விசயத்தில் இந்துத்துவ அமைப்புகள் புகார் அளித்ததும் புலிப்பாய்ச்சல் பாய்ந்த தமிழக காவல்துறை அன்று எஸ்.வி.சேகரை 60 நாட்கள் கடந்தும் கைது செய்யாமல் இருந்தது ஏன்..?
உயிரோடில்லா கடவுளர்களுக்கும், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் கொடுக்கும் மரியாதை இரத்தமும், சதையுமாக நம்மோடு உலா வந்து உயிரோடிருக்கும் நம் சகோதரிகளான பெண்களுக்கும், சாமான்ய மக்களுக்கும் இல்லையா..? இது தான் ஜனநாயகமா..? காவல்துறை தான் விளக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.